”அண்ணாமலை ஐபிஎஸ்: அண்ணா,பெரியார் போட்ட பிச்சை'' - ஆர்.எஸ்.பாரதி

''கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’' அதுபோல அண்ணாவின் பெருமையை அண்ணாமலைக்கு...

”அண்ணாமலை ஐபிஎஸ்: அண்ணா,பெரியார் போட்ட பிச்சை'' - ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாடு மக்கள் வெகுண்டெழுந்தார்கள் என்றால், அண்ணாமலை கர்நாடகாவிற்கே செல்ல வேண்டிய நிலை வரும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு, மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது:- 

” அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை; கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்,.. ’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ அதுபோல அண்ணாவின் பெருமையை அண்ணாமலைக்கு தெரிவது நியாயம் கிடையாது.  அவர் மரியாதையாக பேசுவது இனிமேல் நல்லது. காரணம், திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் அண்ணாவைப் பற்றியோ பெரியாரைப் பற்றியோ எவன் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ; அதை  அனுமதிக்கவோ தமிழ்நாடு என்றைக்கும் தயாராக இல்லை; அதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்",  என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் ”தமிழ்நாட்டில் அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். அவரைவிட வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்று தான் அழைக்கிறார்கள். நேற்று பிறந்த அண்ணாமலை நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறான்.

அண்ணாமலைக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அனுமதிக்க மாட்டோம். அண்ணாமலை தவறான புள்ளி விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.   1956 ஆம் ஆண்டு அண்ணா பேசியதாக கூறுகிறார்.  1949 -ல் திமுகவை துவக்கி தனி பெரும் தமிழ்நாட்டில் பவனி வந்ததாக கூறினார். 

மேலும், அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலையை இன்று ஐபிஎஸ் ஆக உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது அண்ணா போட்ட பிச்சை; பெரியார் போட்ட பிச்சை. அதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன்.   இல்லை என்று சொன்னால் அண்ணாமலையின் நிலைமை என்னவாக மாறியிருக்கும்.

அண்ணாமலையின் பாட்டனார் இருந்திருந்தால் அண்ணாவின் பெருமையை சொல்லி இருப்பார். அண்ணாமலை இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அண்ணாமலை கர்நாடகத்தில் எங்கு பணி செய்தாரோ அந்த ஊருக்கு மிக விரைவில் ஓடிப் போகின்ற நிலைமை வரும்”,  என்று எச்சரிக்கை விடுத்தார்.