தீபாவளி போனஸ் 30% வழங்க வேண்டும்; அண்ணா தொழிற் சங்கம் கோரிக்கை!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவீதமும் ஊக்கத் தொகையாக 10 சதவீதமும் வழங்கக்கோரி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்து துறை செயலாளர் பணிந்த ரெட்டியை சந்தித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் அவரிடம் இந்த கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டதாகவும் அதேபோல தற்போதும் போக்குவரத்து பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழக போக்குவரத்துக் கழகம் தற்போது லாபத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்து வரும் நிலையில் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி இந்த போனஸ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிலாளர்கள்  ஓய்வு பெறும் நாளில் வெறும் கையோடு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பழங்குடி மாணவிக்கு தொல்லை; அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி!