கனமழை எதிரொலி; வானில் வட்டமடித்த விமானங்கள்!

கனமழை எதிரொலி; வானில் வட்டமடித்த விமானங்கள்!

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இடி, மின்னல், சூறைக் காற்றுடன்  மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதில், ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 342 பயணிகளுடன் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக விமானம் வந்திருந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னல், மழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினார்கள்.

அதேபோல பாரீசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், சிங்கப்பூரில் இருந்து 269  பயணிகளுடன் சென்னை வந்த விமானமும் மலேசியா, சிங்கப்பூர், திருச்சி, லண்டன் உள்பட 8  விமானங்கள் தறையிறங்க  முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்து கொண்டு இருந்தன. சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தும் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த 4  விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக  தறையிறங்கின. பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜெர்மன் விமானம் இன்று அதிகாலை 2:50  மணிக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.

அதேபோல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், ஃபிராங்க்பர்ட், இலங்கை உள்ளிட்ட 12 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து 3 மணி நேரம் வரை  தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

இதையும் படிக்க:தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்வு