பல தடைகளுக்கு பின், 8 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கலவரம் காரணமாக 8 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தில் பொதுப் பாதை வழியாக தேர் இழுப்பதில் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால், 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் 144 தடை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஷர்வண்குமார் தலைமையில் நடைபெற்ற சமாதன பேச்சை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி 144 தடை திரும்பப் பெறப்பட்டது.  

பின்னர், தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டமைக்கப்பட்ட தேர் பவனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. 

8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்