"மது வாங்க வரும் 21க்கும் குறைவான வயதினருக்கு, ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்படும்" அமைச்சர் சு முத்துசாமி!

"மது வாங்க வரும் 21க்கும் குறைவான வயதினருக்கு, ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்படும்" அமைச்சர் சு முத்துசாமி!

21 வயதிற்கு குறைவான வயதினர் மது வாங்க டாஸ்மாக் கடைகளை அனுகினால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள  தமிழ்நாடு வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துச்சாமியின் முகாம் அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி பொல்லான் அவர்களின் 218வது நினைவு நாளையொட்டி, தியாகி பொல்லான் அவர்களின் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துச்சாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் சு. முத்துச்சாமி பேசியபோது, "தற்போதைய சட்டத்தின்படி 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது. அதற்கு குறைவான வயதில் உள்ளவர்கள் மது வாங்க டாஸ்மாக் கடைகளை அணுகினால், அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்லி திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுக்க போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த முறையில் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அது போல, பரீட்சார்த்த முறையில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் வேன் மூலம் பிரச்சார வேன் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு மது குடிப்பதில் உள்ள தீமைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது குறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இதுபோன்ற சோதனைகள் பாஜகவின் பழிவாங்கும் முயற்சி தான் என்றும் திமுகவை அச்சுறுத்த முடியாது என்றும் பேசியுள்ளார்.

மேலும், டெட்ரா பாக்கெட் மூலம் மது விற்பனை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது அரசின் ஆய்வில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் எதிரொலி தான் அமலாக்கத்துறை சோதனை" முதலமைச்சர் ஸ்டாலின்!!