முன்விரோதத்தால் வந்த வினை...! பசுக்களை காயப்படுத்தி பழிதீர்த்துக்கொண்ட இளைஞர்...!

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக 2 சினை பசுக்களை மதுபாட்டிலால் அடித்து, கொம்பை உடைத்ததோடு, உடைத்த பாட்டிலைக் கொண்டு பசுக்களை குத்தி காயப்படுத்திவிட்டு சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்விரோதத்தால் வந்த வினை...! பசுக்களை காயப்படுத்தி பழிதீர்த்துக்கொண்ட இளைஞர்...!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.  இவர் விவசாயக்கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதி இளைஞர்கள் சிலரிடையே கோயில் கட்டுவது தொடர்பாக அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில், ஒருதரப்பைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் அஜீத்குமார் (21) என்ற இளைஞருக்கும் சீனிவாசன் என்பவரின் மகன்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.  

இதன் காரணமாக அடிதடி ஏற்பட்டதால் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  முன்விரோதம் காரணமாக  தனது பக்கத்து வீட்டுக்காரரான சீனிவாசன் குடும்பத்தினரிடம், அஜீத்குமார் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றுமதியம் சீனிவாசன் மேய்ச்சலுக்காக,  2 சினைப்பசுக்களை கட்டி வைத்திருந்தார். அந்த இடத்திற்கு குடிபோதையில் சென்ற அஜீத்குமார், தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் ஒரு பசுவின் கொம்பில் தாக்கியுள்ளார். இதில், அப்பசுவின் கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. அப்போதும், ஆத்திரம் அடங்காத அஜீத்குமார் உடைந்த மதுபாட்டிலைக் கொண்டு இரண்டு பசுக்களையும் உடலின் பல்வேறு இடங்களில் குத்தி கிழித்துள்ளார். 

பசுவின் அலறல் சத்தம் கேட்டு சீனிவாசன் குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அஜீத்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, பசுவை மீட்ட சீனிவாசன் குடும்பத்தினர், மருத்துவ சிகிச்சை அளித்து வீட்டில் கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து, செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு பசுக்களை தாக்கி காயப்படுத்திய அஜீத்குமார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சீனிவாசன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.