மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை- உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையை சேர்ந்த இரு பெண்கள், சேர்ந்து வாழ விரும்பி சென்னைக்கு வந்த நிலையில், அவர்களைக் காணவில்லை என அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும், காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, இச்சமூகத்தினரை துன்புறுத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறை நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளைக் கையாளும் போது, சுயக் கட்டுப்பாடுடன் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.