உரிய நேரத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம்..! சட்டத்துறை  அமைச்சர்...!!  

உரிய நேரத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம்..! சட்டத்துறை  அமைச்சர்...!!  

வழக்கறிஞர்களை பாதுகாப்பது தொடர்பான சட்டம் உரிய நேரத்தில் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

சட்டத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், புதுக்கோட்டை, அரியலூர் உள்பட நான்கு மாவட்டங்களில் 4 வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை போன்று தமிழ்நாட்டிலும்  சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதாகவும், ராஜஸ்தான் மாநிலத்தை போன்ற நிலைமை இங்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக   சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசிற்கு தான் உள்ளது என்றும் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், புதுடில்லி போன்ற மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் வரைவு நிலையில் தான் இருப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இது தொடர்பாக சட்டம் இயற்றுவது  உரிய நேரத்தில் முதலமைச்சருடன் ஆலோசித்து சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.