ஈரோடு : அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக...ஜி.கே.வாசன் பேச்சு!

ஈரோடு : அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக...ஜி.கே.வாசன் பேச்சு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினார். 

இதற்கிடையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் தாமக கட்சி தான் போட்டியிட்டது. இதனால் இந்த முறையும் தமாக தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தமாக தலைவர் ஜி.கே.வாசனுடன் ஈபிஎஸ் அணியினர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த முறை அதிமுக தான் நேரடியாக களம் இறங்குவதாகவும், நாங்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தமாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதையும் படிக்க : இனி ஃபுட்போர்ட் அடிக்கும் மாணவர்கள் மீது புகார்...போக்குவரத்துத்துறையின் அதிரடி அறிவிப்பு...!

இதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனித்தனி வேட்பாளர்களை அறிவித்து, பின் ஈபிஎஸ் நீதிமன்றத்தை நாடியதால், நீதிமன்றத்தின் உத்தரவின் படி அவைத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்து கடிதம் அனுப்பியதால், ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் செய்தது. இறுதியில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஈபிஎஸ் அறிவித்த தென்னரசு தான் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த தமாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு கடந்த 19 மாதங்களாக தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், டெல்டா மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அரசு செவி சாய்க்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.