எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்; சபாநாயகர் முடிவை தெரிவிக்க, அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தன்னுடைய முடிவை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ம் தேதி கூட உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக ஆர்.பி . உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை சபா நாயகர் ஏற்று சட்ட மன்றத்தில் இருக்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என் அதிமுக உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, ஓ.எஸ். மணியன், துணை கொறடா ரவி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம்,  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் இருக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும் எனவும எதிர்க்கட்சித் துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 
.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சித் துணை தலைவர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது முறையாக கடிதம் வழங்கியுள்ளதாகவும், சட்டபேரவை விதிமுறை அடிப்படையிலும் மரபு அடிப்படையிலும் எதிர்கட்சித்துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளதாகவும், இதுவரை பின்பற்றி வந்த மரபுகளை சபாநாயகர் பின்பற்றுவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான மனு பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்ததாக கூறிய அவர், இந்த பேரவை கூட்டத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும், எடுக்கும் முடிவை எழுத்து பூர்வமாக கடிதம் மூலம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கப்பசை பறிமுதல்!