அதிமுக எழுச்சி மாநாடு...பிரமாண்டமான ஏற்பாடுகள்!

அதிமுக எழுச்சி மாநாடு...பிரமாண்டமான ஏற்பாடுகள்!

மதுரையில், அதிமுக சாா்பில் எழுச்சி மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சார மாநாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் இன்று எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி, அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, மதுரை வலையங்குளம் ரிங் ரோடு பகுதியில் பிரமாண்ட முறையில் மாநாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் அதிமுக-வின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில், எம்.ஜி.ஆரின் உறுப்பினர் அட்டை, ஜெயலலிதா தாக்கப்பட்ட புகைப்படம் போன்றவை இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மாநாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் அதிமுகவினர் மதுரைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மறுபுறம் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றும் மதுரைக்கு இயக்கப்பட்டது. அதிமுக மாநாட்டை யொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். கப்பலூர் பகுதிக்கு வருகை தந்த அவருக்கு சாலையின் இரண்டு புறத்திலும் திரண்டிருந்த தொண்டர்கள் மலர் தூவியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்துள்ளனர். 

இன்று காலை 7 மணிக்கு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக 52 அடி உயர கம்பத்தில் அதிமுக கட்சி கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்ற உள்ளார். பின்னர், மதுரை முத்து பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் இசை அமைப்பாளர் தேவா தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.