தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த வாலிபர்... தனிப்படை அமைத்து விசாரிக்க கோரிக்கை...

ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த வாலிபர் மரணம் குறித்து  தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் கூறியுள்ளார்.

தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த வாலிபர்... தனிப்படை அமைத்து விசாரிக்க கோரிக்கை...

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தட்டாப்பட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் மாரியப்பன் ஆராயி தம்பதியரின் மகன் மோகன்ராஜ் (30) வெப்படையிலுள்ள தனியார் நூற்பாலையில் பிட்டராக பணிபுரிந்து வந்தார். மோகன்ராஜ் கடந்த 7 வருடத்துக்கு முன்பு அதே நூற்பாலையில் பணிபுரிந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஆறு வயதில் கயல் என்ற பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக இருவரும் பிரிந்து  விவாகரத்து கேட்டு சங்ககிரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதனிடையே அதே நூற்பாலையில் பணிபுரிந்து வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து சித்ராவின் பெற்றோர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் மகள் சித்ரா காணவில்லை என அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் திருச்செங்கோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மோகன்ராஜ் சித்ரா தம்பதியினரை தாரமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து இரு வீட்டாரையும் அழைத்துபேசி காதல் கணவன் மனைவி இருவரையும் பிரித்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையிலிருந்த மோகன்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16ந் தேதி காலை சங்ககிரி அருகேயுள்ள மாவெலிப்பாளையம் ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் தலை தனியாக  துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தட்டாப்பட்டி அருந்ததியர் காலனியிலுள்ள  மோகன்ராஜின் வீட்டிற்கு வந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிக்க மக்கள் அருந்ததியர் மக்களை ஆணவக் கொலை செய்து வருவதாகவும், மோகன்ராஜின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு காவல்துறையினரிடம்  தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேட்டி அளித்தார். அப்போது ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.