போச்சம்பள்ளியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ....

நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ போச்சம்பள்ளியில் பூத்துக்குலுங்கியது. பூவை குடும்ப உறுப்பினர்கள் ஊதுவர்த்தி ஏற்றி வணங்கினர்.

போச்சம்பள்ளியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ....

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது  மிகவும் அரிதான ஒன்று. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.

அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த முல்லை நகர் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், தனது வீட்டில் பிரம்ம கமல பூ செடியை சுமார் 5 வருடமாக வளர்த்து வருகிறார். இதற்கிடையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த அதிசய பூ பூத்தது. பூத்தவுடன் வீடு முழுவதும் வாசம் நிரம்பியது. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் வெளியே வாராண்டாவில் வைத்திருந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து 4 பூக்கள் பூத்திருந்தது.

இதைக்கண்ட விஜயலட்சுமி மற்றும் குடும்ப உறிப்பினர்கள் ஊதுவத்தி ஏந்தி பயபக்தியுடன் வணங்கி தங்கள் குறைகளை நீக்க வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் பார்த்து இந்த பூவைப் தொட்டுக் கும்பிட்டு வணங்கினர்.