தகுதியுள்ள கைதிகளை ஜாமீனில் விடுவிக்கலாம்... தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய உயர்மட்ட குழு பரிந்துரை...

மதுரை மத்திய மற்றும் புழல் சிறைச்சாலைகளில் தகுதியுள்ள கைதிகளை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தகுதியுள்ள கைதிகளை ஜாமீனில் விடுவிக்கலாம்... தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய உயர்மட்ட குழு பரிந்துரை...
சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி சுப்பையா தலைமையில் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு அவ்வப்போது கூடி கொரோனாவின் தற்போதய நிலை மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும்.
 
சிறைச்சாலைகளில் இருக்கும் நெருக்கடியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இந்த உயர்மட்ட குழு தகுதியுள்ள கைதிகளை ஜாமினில் வெளியிட சிறைத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 11 ஆம் தேதி நிலவரப்படி 45,712 பேர் சொந்த ஜாமீனிலும், 57,866 பேர் சாதாரண ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். 68% கைதிகளும், 87% சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், புழல் சிறையில் கோவிட்  பாதுகாப்பு மையத்தை தொடங்கவும், சென்னை மாநகராட்சி மற்றும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் சிலிண்டர், உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவும், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட நீதிபதிகள் மதுரை மத்திய சிறைச்சாலையிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நீதிபதிகள் புழல் சிறையிலும் ஆய்வு செய்து தகுதியுள்ள கைதிகளை ஜாமீனில் விடுவிக்க உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.