வாடிக்கையாளர் அக்கவுண்ட்டில் வந்து விழுந்த ரூ.756 கோடி!!

தஞ்சாவூரில் தனியார் வங்கியின் வாடிக்கையாளரின் கணக்கில் 756 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வீரப்பனையம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கணேசன், கோட்டாக் மகேந்திரா என்ற தனியார் வங்கியில் கணக்கு தொடங்கியிருந்தார். 

மேலும் வேறு சில வங்கிகளின் கணக்குகளையும் நிர்வகித்து வந்த கணேசனுக்கு சில நாட்கள் முன்பு அக்கவுண்ட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில், வழக்கம் போல ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளார் கணேசன். 

இந்த நிலையில் அக்டோபர் 6-ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் தனது வங்கிக் கணக்கில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். மேலும் நண்பர் ஒருவருக்கு 1000 ரூபாய் பணம் அனுப்பிய பின்னர், கணேசனின் மொபைலுக்கு மெசேஸ் வந்தது.  

அதில் தங்கள் வங்கிக் கணக்கில் 756 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாக் மகேந்திரா வங்கியில் இருந்து மெஸேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்து திடுக்கிட்டுப் போன கணேசன், இரவெல்லாம் உண்ணாமல் உறங்காமல் விடியும் வரை காத்திருந்தார்.

பின்னர் காலை 10 மணியளவில் வங்கி கிளைக்கு சென்று மேலாளரை சந்தித்தபோது, அவர், கணேசனின் மொபைல் ஸ்க்ரீன் ஷாட்டை மட்டும் வாங்கி வைத்து விட்டு திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 

தன் கணக்கில் இவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டதால், அதற்கான வருமான வரியை யார் கட்டுவார்? யாரோ ஒருவரின் தவறுதலால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுமா? என சிந்தித்தவர் உடனடியாக இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து நடந்ததை கூறினார். 

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிருஷ்ணன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.