ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு!  

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

   ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு!   

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அது சம்பந்தமாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 154 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்திய ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதனால் அறிக்கை சமர்ப்பிக்க ஆணையத்திற்கு அடுத்தடுத்து கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தன. 10-வது முறையாக கொடுக்கப்பட்ட  6 மாத கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கால நீட்டிப்பு கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து, மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற தடை காரணமாக கடந்த 26 மாதங்களாக  விசாரணை நடைபெறாமல் உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றும், இந்த ஆணையத்தை ஏன் கலைக்கக் கூடாது எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.