500 ஏக்கர் வாழைமரங்கள் சாய்ந்து சேதம் - விவசாயிகள் கவலை

500 ஏக்கர் வாழைமரங்கள் சாய்ந்து சேதம் - விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்து தரையில் சாய்ந்துள்ளன

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று பெய்த மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு, வானக்கன்காடு மற்றும் வெட்டன் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்து தரையில் வீழ்ந்தன. 

விவசாயிகளின் கடந்த நான்கு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் வேளையில் இந்த சூறைக்காற்றின் காரணமாக அனைத்து வாழை மரங்களும் சேதமடைந்துள்ளதால் தங்களது உழைப்பும் பொருளாதாரமும் வீணடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல், கருக்காக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்களும் மழையால் தரையில் சாய்ந்து நாசமாகியுள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றவர்கள். வாழைமரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வேளாண்மை துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நேரில் வந்து களத்தில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.