40 கி.மீ., கட்டுப்பாடு; லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு...!

40 கி.மீ., கட்டுப்பாடு; லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு...!

சென்னையில் 40 கி.மீ வேகத்திற்குள் வாகனத்தை இயக்கும் போது டீசல் பயன்பாட்டில் நஷ்டம் ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

சென்னையில் அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, புதிய ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பகலில் 40 கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் தாண்டினால், இனி அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தி வெளியானது.

இந்நிலையில் சென்னை, எழிலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 
அழகேசன்:- 

" சென்னையில் வாகனங்களை இயக்க வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது தவறானது. அடிப்படையில் வாகனங்களே அப்படி தயாரிக்கப்படுவதில்லை. கியர்களை சரியாக இயக்கினால்தான் வாகனங்களின் டீசல் பயன்பாடு சரியான அளவில் இருக்கும். 35-40 கி. மீ வேகத்தில் வாகனங்களை இயக்க கூறுவது எவ்விதத்தில் நியாயமானது. முதல் கியரில் வண்டியை இயக்கும் போது மற்ற கியர்களை போடாமல் எப்படி இயக்குவது?.

இதனால் பெட்ரோல் டீசல் பயன்பாடு அதிகரிப்பதோடு ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறைந்த வேகத்தில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்கும் போது நேர விரயம் ஏற்படும். காவல்துறையினர் இதில் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகளுக்கு தனித்தனியாக லேன்களை உருவாக்கினால் விபத்துகல் குறையும்.* அரசு வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்கினால் சரியாக இருக்குமா? "  என கேள்வி எழுப்பி உள்ளார்.