கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு தொடங்கியது.. தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் தோ்வில் பங்கேற்பு!!

நாடு முழுவதும் இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர்.

கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு தொடங்கியது.. தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் தோ்வில் பங்கேற்பு!!

2022-23-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான  ‘நீட்' தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 497 நகரங்களில் நடக்கும் தேர்வை மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனா். தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது,  ஷூக்கள்,  கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி, பெல்ட், தொப்பி, மொபைல் போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோ போன் போன்றவற்றை தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 18 நகரங்களில் நடக்கும் தேர்வில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 10,341 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனா்.

கோவையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 229 மாணவர்கள் உள்பட மொத்தம் 5,400 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதி வருகின்றனா். நாகை மாவட்டத்தில் இரண்டு தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள  தேர்வு மையங்களில்  கடும் கட்டுப்பாடுகளுடன் 1037 பேர்  நீட் தேர்வு எழுதி வருகின்றனா்.

நீட் தேர்வுக்கு வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருந்தவர்கள் மட்டுமே  தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தேர்வு முடிந்ததும் வினாத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறினால், விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.