”6 குடியரசு தலைவர்கள் மாணவர்களாக பயின்றது சென்னை பல்கலைகழகத்திற்கு பெருமை” திரெளபதி முர்மு

”6 குடியரசு தலைவர்கள் மாணவர்களாக பயின்றது சென்னை பல்கலைகழகத்திற்கு பெருமை” திரெளபதி முர்மு

சென்னை பல்கலைகழகத்தின் 165வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். 

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் சென்னை பல்கலைகழகத்தின் 165வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக இவ்விழாவிற்கு வருகை தந்த குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் மாளிகையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு...! தவறான சிகிச்சை தான் காரணமா?

ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பேர் இளங்கலை மாணவர்களும், 564 பேர் முதுகலை மாணவர்களும் பட்டம் பெற்ற இந்த நிகழ்ச்சியில், பதக்கங்கள் வென்ற 197 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டத்தையும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தார்.  

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் கலந்துகொண்டது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார். தனித்துவமான மாநில கொள்கையை வடிவமைப்பதில் தமிழ்நாடு தீவிரமாக உள்ளது என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது என்றால், அதற்கு திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட விதை தான் காரணம் என்றார். 

முதலமைச்சரை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்கையில் வெற்றி மட்டுமே இருக்காது, ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் இருக்கும், அதில் இருந்து நீங்கள் மீண்டு எழ வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

அவரை தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னை பல்கலைகழகத்தில் 6 குடியரசு தலைவர்கள், மாணவர்களாக பயின்றது என்பது இப்பல்கலைகழத்தின் பெருமைக்கு சான்று என்றார். இறுதியாக தனது உரையை முடிக்கும் முன்பு, பாரதியாரின் கவிதையை தமிழில் கூறி நிறைவு செய்தார்.