எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 கைது...மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 கைது...மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 170 விசைப்படகுகளுடனும் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 85 விசைப்படகுகளுடனும் மொத்தம் 255 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த சிவக்குமார், கலையரசன், லோகேஸ்வரன், சக்தி, பிரபு ,சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 6 மீனவர்களையும், ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முருகானந்தம் விசாலிங்கம் , பாரதிதாசன்,  சசிக்குமார், நயில், ரவி , உள்ளிட்ட 6 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளுடன் மொத்தம் 12 மீனவர்களை கைது செய்துள்ளனர். 

இதையும் படிக்க : கிருஷ்ணகிரி ஜெகன் உயிரிழப்பு தொடர்பாக ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த முதலமைச்சர்!

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மயிலட்டி கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர். இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வது மீனவர்கள் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.