11ம் & 12ம் விடைத்தாள், நுழைவுச்சீட்டு பெற இணையதள முகவரி வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தரவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

11ம் & 12ம் விடைத்தாள், நுழைவுச்சீட்டு பெற இணையதள முகவரி வெளியீடு -  பள்ளிக் கல்வித்துறை

இது குறித்த அறிக்கையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மறுகூட்டல், மறு மதிப்பீடு விரும்புவோர், அதற்கான கட்டணத்தை 25ஆம் தேதிக்குள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு, ஒரு பாடத்திற்கு 505 ரூபாயும், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், நுழைவு சீட்டுகளை நாளை முதல், www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை, அந்தந்த மாணவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.