வறுமையின் பிடியில் பாஜக ஆளும் மாநிலங்கள்? 

வறுமையின் பிடியில் பாஜக ஆளும் மாநிலங்கள்? 

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்னமும் ஏழ்மை நிலையிலேயே இருப்பதாக நிதி ஆயோக் வெளியிட்ட    வறுமைக்குறியீட்டு பட்டியலில் தெரியவந்துள்ளது. 

வறுமையில் தவிக்கும் மாநிலங்கள்: 


இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த மாநிலங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வறுமையில் இருப்பது தெரிவந்துள்ளது. இங்குள்ள மக்களில், குறிப்பாக, பீகார் மாநிலம் அதன் மொத்த மக்கள் தொகையில் 51.91 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளன.  அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் 42.16 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், .  உத்தரப் பிரதேசத்தில், 37.79 சதவீதம் பேரும் மத்தியப் பிரதேசத்தில் 36.65 சதவீதம் பேரும் வறுமைப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். 


தமிழ்நாட்டின் நிலை என்ன?


இந்தியாவிலேயே குறைந்த அளவில் ஏழ்மை நிலவும் மாநிலமாக கேரளா கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு, மொத்த மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளனர். கோவாவில் 3.76 சதவீதம் பேரும், சிக்கிம் 3. 82 சதவீதம் பேரும் வறுமையில் உள்ளனர். திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறும் தமிழ்நாடு வறுமைக்குறியீட்டில் 4-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், 4.89 சதவீதம் பேர் வறுமையில் சிக்கித்தவிப்பது நிதி ஆயோக்கின் வறுமைக்குறியீட்டு தரப்பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.  

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள்:


பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அதிக வறுமை உள்ள மாநிலங்களாக இருக்கும், பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இதே போல், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலம், வறுமைக்கோட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்கிறது. இந்த மாநிலங்கள் வறுமைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.  
 
என்ன செய்ய போகிறது அரசாங்கம்?


2030க்குள் வறுமை இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்தியாவில் இன்றும் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன.  109 நாடுகளில் நடத்தப்பட்ட உலகளாவிய வறுமைப்பட்டியலில், இந்தியா 66-வது இடத்தில் உள்ளது.  இதை சரிசெய்ய அரசு என்ன செய்ய போகிறது?  2030ல் இலக்கை அடைய முடியுமா?