மீண்டும் சவால் விடுத்த நாராயணசாமி...ஏற்பாரா தமிழிசை?

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் குறைகளை கேட்க சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியதால் அவர் அதை நிறுத்திக்கொண்டார்.

மீண்டும் சவால் விடுத்த நாராயணசாமி...ஏற்பாரா தமிழிசை?

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதை புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் நேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரியின் நடப்பு அரசியல் குறித்து தனது கருத்துகளை செய்தாளர்களிடம் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ஆளுநர் மக்களை சந்திக்கவில்லை

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, சட்டவிதிகளை மீறியும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறியும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவது விதிமுறை மீறல் என ஏற்கனவே குற்றஞ்சாட்டியதற்கு தெலுங்கானாவில் மக்கள் சந்திப்பு நடத்தியுள்ளதாக கூறி ஒரு புத்தகத்தையும் கடிதத்தையும் எனக்கு ஆளுநர் தமிழிசை அனுப்பியிருந்தார். அந்த புத்தகத்தில் அவர் பதவி ஏற்றது, முக்கிய பிரமுகர்கள் சந்தித்தது மட்டுமே தான் அதில் உள்ளது என்றும் மக்கள் சந்திப்பு அல்லது மக்களிடம் குறைகேட்கும் தொடர்பான செய்திகள் எதுவும் அதில் இடம்பெறவில்லை என்றார்.

மேலும் படிக்க : புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

தமிழிசைக்கு சவால் விடுத்த நாராயணசாமி

நான் தமிழிசை செளந்தராஜனுக்கு சவால் விடுகின்றேன் முடிந்தால் தெலங்கானா மாநிலத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்கின்றேன் என்று சொல்லுவாரா? மாதத்தில் இரண்டு முறை தெலுங்கானாவில் பொதுமக்களை சந்திக்கின்றேன் என அறிவிப்பாரா? என சவால் விடுத்த நாராயணசாமி, தமிழிசை தெலுங்கானாவில் இது போன்று ஜனதா தர்பார் செய்தால் அந்த மாநிலத்தை ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார். தெலங்கானாவில் அரசு நிகழ்ச்சிக்கு கூட அம்மாநில அரசு ஆளுநர் தமிழிசையை அழைப்பது இல்லை அதனால் தான் புதுவையிலே இருக்கின்றார்.

மேலும் படிக்க : உயர்நீதிமன்ற உத்தரவை  ஆளுநர் தமிழிசை மதிக்க வேண்டும்-நாராயணசாமி!

ஆன்லைன் ரம்மிக்கு தடை

ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் மக்கள் குறைகளை கேட்க சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியதால் அவர் அதை நிறுத்திக்கொண்டார். தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் சனாதனம் பேசுகின்றார், கேரள ஆளுநர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்கின்றேன் என்கின்றார். ஆகவே ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், மத்திய அரசு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களை ஒடுக்குவதற்காக நடக்கும் நாடகத்தில் ஆளுநர்கள் அதன் அங்கமாக உள்ளார்கள் என நாராயணசாமி கூறினார். மேலும் தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார் நாராயணசாமி,