பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்...!

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்...!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கட்சி சார்பில் இதுவரை தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள 17 நபர்கள் உட்பட பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மேலவை உறுப்பினர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். 

இதில் குறிப்பாக பாஜக கட்சியில் முன்னாள் துணை முதல்வராக பணியாற்றிய லக்ஷ்மண் சவதி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதே போல மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் கட்சித் தலைமை முடிவுக்கு மறுப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி இருந்த நிலையில் அவரை சமாதானம் செய்ய பாஜக கட்சி மேலிடம் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. 

சனிக்கிழமை இரவு முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஹீப்ளியில் ஜெகதீஷ் ஷட்டரை நேரில் சந்தித்து சமாதானம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தான் பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

கட்சியின் ஆரம்ப கட்டத்தில் போட்டியிட வேட்பாளர்களை வீதி வீதியாக சென்று தேர்ந்தெடுத்து அவர்களை வெற்றி பெற உழைத்து கட்சியை வளர்த்த தனக்கு 30 வருடங்களில் இல்லாத மிகப் பெரிய வலியை கட்சி தனக்கு கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஞாயிறு காலை சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த பிறகு தான் தேர்தலில் போட்டியிடும் முறை குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகி வருவது அக்கட்சிக்கு பெறும் பின்னடைவை தேர்தல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.