காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு?!!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு?!!

காங்கிரசின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இன்று நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் இன்று நேருக்கு நேர் மோத உள்ளனர். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

இதன்மூலம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் அல்லாத தலைவர் பதவிக்கு வருவது உறுதியாகியுள்ளது. 9,000 க்கும் மேற்பட்ட  காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள். கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள 65க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு:

அனைத்துக் கண்களும் இந்த சுவாரஸ்யமான போட்டியின் மீதுதான் உள்ளன.  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் மாநிலங்களில் இருந்து டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு கொண்டு வரப்படும். 

தலைவர்களின் வாக்குப்பதிவு:

கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில்  வாக்களிக்க உள்ள நிலையில், ராகுல் காந்தி கர்நாடகாவின் சங்கனக்கல்லுவில் உள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் முகாமில் உள்ள பிசிசியின் பிரதிநிதிகளான சுமார் 40 பயணிகளுடன் வாக்களிப்பார்.  தரூர் கேரள காங்கிரஸ் தலைமையகமான திருவனந்தபுரத்திலும், கார்கே பெங்களூருவில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்திலும் வாக்களிக்கிறார்கள். 

வெற்றி யாருக்கு?:

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர் கார்கே முன்னிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் காந்தி குடும்பத்தின் தேர்வு எனவும் கூறப்படுகிறது.  அதோடு அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவும் உள்ளதாக தெரிகிறது.   மறுபுறம், தரூர், கட்சி மாற்றத்திற்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி ஆதரவைப் பெற்று வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​இரு வேட்பாளர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தரூர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

137 ஆண்டுகளில் ஆறாவது முறையாக தேர்தல்: 

137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியில் 6வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.  இந்தத் தேர்தலில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. கடந்த 2000ஆம் ஆண்டு கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது உ.பி.யில் இருந்து சோனியா காந்தி அவருடன் போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்தார்.

                                                                                                                          -நப்பசலையார்

இதையும் படிக்க:     ”நாட்டின் எதிர்காலம் ஆபத்தில்....” செய்தியாளர்கள் சந்திப்பில் சசி தரூர்!!!