மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து...
பிரதமர் மோடி 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் 81 உறுப்பினர்களை உள்ளடக்கிய அவரது மத்திய அமைச்சரவையில் எவ்வித மாற்றுமும் செய்யப்படாமல் இருந்தது. மேலும் 53 அமைச்சர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதில் முக்கிய அமைச்சர்கள் சிலர், கூடுதலாக 4 துறைகளை கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடருக்கு முன்னதாக காலியாக உள்ள அமைச்சர் பதவிகள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
குறிப்பாக ஜோதி ராதித்ய சிந்தியா, சர்பானந்தா சோனாவால் உள்ளிட்ட  தலைவர்களும், இளம் புது முகங்களும் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்றும், சரிவர செயல்படாத அமைச்சர்கள் சிலர் நீக்கப்படுவர் எனவும் தகவல்கள் கசிந்தன.
 
இதனிடையே கடந்த 3 நாட்களாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இன்று மாலை 6 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், இன்று திடீரென பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற இருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சக குழு கூட்டமும் ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.