பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் பிரவீன் கொலை வழக்கில் இருவர் கைது - காவல்துறை தகவல்

பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் பிரவீன் நெட்டாரு வெட்டி கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் பிரவீன் கொலை வழக்கில் இருவர் கைது - காவல்துறை தகவல்

நேற்று தக்சின கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, அவரின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறி இருந்தார். இந்த நிலையில், நேற்று தக்சின கன்னடாவில் பாஜக நிர்வாகிகளுக்கு, பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் பாஜக அரசை கண்டித்து சிக்கமங்களூரு இளைஞரணி நிர்வாகிகள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

பிரவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பாஜக தலைவர் நளின் குமார் கட்டிலீன்  வாகனத்தை பஞ்சர் செய்து தாக்குதலிலும் பாஜகவினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் இந்துத்துவா தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பாஜக தலைவர் கொலை மற்றும் தொண்டர்கள் மீது தடியடி என்ற நிலையில் மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உள்ளதாகவும், குறிப்பாக தொட்பலாபூர் மாநாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இதன் காரணமாக நள்ளிரவு 12.30 மணிக்கு தனது இல்லத்தில் அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை கட்சி தலைவர் ஒருவர் இறந்துள்ள நிலையில் தனது ஓராண்டு நிறைவு விழாவை ரத்து செய்வதாக அறிவித்தார். கொண்டாட்டத்திற்கு மாறாக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை மட்டும் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் பிரவீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக ஜாகீர் மற்றும் ஷபீக் என்பது அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தக்சின கன்னடா எஸ்பி சோனாவனே ரிஷிகேஷ் தெரிவித்துள்ளார்.