தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க...சிலரின் சூழ்ச்சி வலை...தமிழிசை பரபரப்பு பேட்டி!

தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க...சிலரின் சூழ்ச்சி வலை...தமிழிசை பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், பிரதோஷ நாளான நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  தொடர்ந்து, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரதோஷ தினத்தில் சிதம்பரம் நடராஜரை வழிபடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கோவிலுக்கு வருவதே ஒரு சைகோதெரபி என்று கூறிய அவர், வெளிநாடுகளில் மூலைக்கு மூலை மனநல மருத்துவமனைகள் இருக்கின்றது. ஆனால் நமது நாட்டில் ஆங்காங்கே கோவில்கள் இருக்கின்றன. மனதில் பாரம் இருந்தால் நாம் மருத்துவமனைக்கு  செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக கோவிலுக்கு சென்றாலே போதும் மன பாரம் இறங்கிவிடும் என்று ஆன்மிகத்தை பற்றி கூறினார்.

இதையும் படிக்க: திமுகவுக்கு அப்போ ஒரு பேச்சு...இப்போ ஒரு பேச்சு...அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்!

தொடர்ந்து பேசிய அவர், சிலரின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டில் தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்கும் ஒரு  முயற்சி நடப்பதாக தெரிவித்தார். தமிழும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்று கூறிய அவர், ஆன்மிகத் தமிழ்தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் மின்சாரம் தனியார் மயமாவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், கொள்கை முடிவுகளின்படி பொதுமக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறோம் என்று கூறினார்.