திரிபுராவில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு பதிவு...!

திரிபுராவில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு பதிவு...!

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கிய நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஒருபுறம், காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கட்சிகள் மறுபுறம் என இன்றைய சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும் களமிறங்கியுள்ளன. தொடர்ந்து தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், 1100 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் உட்பட 31 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : விறுவிறுப்பான தேர்தல்... ஜனநாயகக் கடமையாற்றினார் முதலமைச்சர் மாணிக் சாஹா...!

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று  வாக்களித்து வருகின்றனர். அதன்படி, மதியம் 1 மணி நிலவரப்படி 51 புள்ளி 35 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவாளர்கள், மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாகவும், அதனை மீறி சாலைமறியலில் ஈடுபட்டு மக்கள் வாக்களித்து வருவதாகவும் திரிபுரா முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.