ஜம்முவில் பள்ளத்தாக்கில் விழுந்து கோர விபத்துக்குள்ளான பேருந்து!!!

ஜம்முவில் பள்ளத்தாக்கில் விழுந்து கோர விபத்துக்குள்ளான பேருந்து!!!

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜம்மு- காஷ்மீரின் சாவ்ஜியான் பகுதியிலிருந்து மண்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.  சம்பவம் நடந்த உடனே உள்ளூர்வாசிகள், காவலர்கள், ராணுவத்தினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் குறைந்தபட்சம் 9 பேர் இறந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணைநிலை ஆளுநர்:

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ” பூஞ்ஜின் சவ்ஜியான் விபத்தில் உயிரிழப்பு வருத்தமளிக்கிறது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்  இறந்தவர்களின் உறவினர்களிடம் 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.  காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர்:

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு” பூஞ்ஜின் சவ்ஜியான் விபத்தில் உயிரிழப்பு மனவேதனை அளிக்கிறது.  எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருக்கிறது.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”  என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள்  முதலமைச்சர் உமர் அப்துல்லா, "பூஞ்சில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: மமதாவால் முறியடிக்கப்பட்ட பாஜகவின் ”நபன்னான் சல்லோ”