பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் சென்றதற்காக பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த கொடுமை..

கர்நாடகாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் கோவிலுக்குள் சென்றதற்காக, அவனின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் சென்றதற்காக பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த கொடுமை..

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியாபூர் என்ற கிராமத்தில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. இங்கு உயர் வகுப்பினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறப்படும் நிலையில், கடந்த 4-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த பட்டியலின சிறுவன் ஒருவன் தமது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோருடன் சென்று தரிசனம் செய்துள்ளான்.

இதில், சிறுவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள், சிறுவன் கோவிலுக்குள் சென்றதற்காக, அவனின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த சிறுவனின் பெற்றோர், இதுகுறித்து பட்டியலினத்து தலைவர்களிடம் உதவி கோரியுள்ளனர். இதையடுத்து, போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளித்து வழிவகை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடைபெறாத வகையில் நல்லிணக்க கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.