16வது காவிரி ஆணைய கூட்டம்.. மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தடை - உச்சநீதிமன்றம்

16வது காவிரி ஆணைய கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தடை விதித்துள்ளது.

16வது காவிரி ஆணைய கூட்டம்.. மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தடை - உச்சநீதிமன்றம்

மேகதாது விவகாரம்:

வருகிற 22ஆம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின், 16வது கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க முடிவெடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இக்கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என, ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டை மறுத்த கர்நாடக அரசு:

உத்தரவுப்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றம் சாட்டியது. இருப்பினும் இக்குற்றச்சாட்டை மறுத்த கர்நாடக அரசு, இந்த வழக்கு தேவையற்றது என வாதிட்டது. மேலும் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் கட்டப்படும் அணை, நீர் பங்கீடு விவகாரத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்தது.

மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது:

இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தினை அறிய விரும்புவதாக குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்த அனுமதி அளித்ததோடு, கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.