கலால் வரியை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசுகள் குறைக்கவில்லை - பிரதமர் மோடி

எரிபொருளுக்கான கலால் வரியை தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கலால் வரியை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசுகள் குறைக்கவில்லை - பிரதமர் மோடி

ஒமிக்ரான் பரவலுக்கு பின் வடமாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், மாநிலங்களில் கொரோனா தடுப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெருந்தொற்று சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகவும், 85 சதவீதத்திற்கும் மேலான சிறார்களுக்கு இரு டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால் மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர்,  மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் போரால் மருந்து பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறிய அவர், சிறப்பான விநியோகத்திற்கு மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான சூழல் நிலவுவது அவசியம் என குறிப்பிட்டார்.

எரிபொருளுக்கான கலால் வரியை கடந்தாண்டு மத்திய அரசு குறைத்து என தெரிவித்த மோடி, மாநில அரசுகளை குறைக்க அறிவுறுத்தியும், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார்.