பதவி ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சித்து... மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் தொடர விருப்பம்...

பஞ்சாப் காங்கிரஸ்  தலைவர் பதவி ராஜினாமாவை சித்து,  திரும்ப பெற்றுள்ளார்.

பதவி ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சித்து... மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் தொடர விருப்பம்...

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், சித்து, பஞ்சாப் காங்கிரஸ், தலைவராக நியமிக்கப்பட்டார்.

சித்து தலைமையை ஏற்க விரும்பாத அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த மாதம் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் உள்ளிட்ட நிர்வாகிகள், சித்துவை சந்தித்து சமரசம் செய்தனர். இதையடுத்து சித்து தனது முடிவை மாற்றிக்கொண்டார். ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் தனது பணியை தொடர அவர் விருப்பம் தெரிவித்தார்.