பெகாசஸ் விவகாரம்: 10 நாட்களில் குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!  

பெகாசஸ் விவகாரம் பற்றி விசாரிக்க 10 நாட்களில் வல்லுநர் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம்: 10 நாட்களில் குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!   

பயங்கரவாதிகளை உளவுப்பார்க்க இஸ்ரேலில் பயன்படுத்தப்படும் பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி, இந்திய பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் வேவுபார்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசும் விளக்கம் அளிக்காததால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, நாடாளுமன்றம் தொடர்ச்சியாக முடங்க முக்கிய காரணமானது.

இதனிடையே பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி தொலைப்பேசி உரையாடலை ஒட்டு கேட்க மத்திய அரசே அனுமதி வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி, இந்து குழும பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை ஏற்கனவே நடந்தநிலையில், வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வரை, இதுதொடர்பாக வெளியே விவாதம் நடத்தப்படக்கூடாது என தலைமை நீதிபதி ரமணா அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், இரு பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரிக்கையை  தாக்கல் செய்தார். அதில் இந்த ஒட்டு கேட்பு விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், அவை ஆதாரமின்றி அனுமானத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும்  இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அரசு தரப்பில் தனி நிபுணர்கள் குழு ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்வு குழுமத்தின் பரிந்துரையை ஏற்று 10 நாட்களில் அந்த குழுவை அமைத்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.