புதுச்சேரி புதிய அரசின் முதல் பட்ஜெட்... புதிய திட்டங்கள் வெளியிடப்படுமா..? 

துணை நிலை ஆளுனர் உரையுடன் புதுச்சேரி சட்டசபை இன்று தொடங்குகிறது. அப்போது முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதில் புதிய சலுகைகள் திட்டங்கள் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி புதிய அரசின் முதல் பட்ஜெட்... புதிய திட்டங்கள் வெளியிடப்படுமா..? 

புதுச்சேரியில் என்.ஆர்.-காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்  இன்று காலை தொடங்குகிறது. புதிய அரசின் முதல் கூட்டம் இது என்பதால் துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். 
அதன்பின் காலை 11.30 மணியளவில்  துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் சபை நடவடிக்கைகள் முடிவடைகிறது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது.

அப்போது 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.  புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள்  மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சட்டசபை அலுவல்கள் முடியும் வரை கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.  இதற்கிடையே வாரிய தலைவர்கள் பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வாரியம் கேட்டு வலியுறுத்தி வருகின்றன.

மொத்தத்தில் முக்கிய வாரியங்களை பெற்று விட வேண்டும் என்பதில் இந்த கட்சிகளிடையே போட்டாபோட்டி காணப்படுகிறது. சட்டசபை  கூட்டத் தொடர் நிறைவு பெற்றதும் வாரிய  தலைவர் பதவி நியமனம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.