வாரணாசியில் வளர்ச்சி பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி...

வாரணாசியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை, பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

வாரணாசியில் வளர்ச்சி பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி...

உத்தரப்பிரதேசத்தில் தமது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்தார். இதனையடுத்து பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் நள்ளிரவு வரை 6 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாரணாசியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை, பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த புனித நகருக்கான சாத்தியப்பட்ட சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவது நம்முடைய உயரிய முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை அறிந்த உள்ளூர்வாசிகள், அந்த பகுதியில் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி கையசைத்த பிரதமர் மோடி, சிலருடன் உரையாடி விட்டு சென்றார்.

பனாரஸ் ரெயில் நிலையத்திலும் நள்ளிரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த ஊழியர்களை நோக்கி கையசைத்தார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சுத்தமான, நவீன மற்றும் பயணிகளுக்கு ஏற்ற ரயில் நிலையங்களை உறுதிப்படுத்தவும், ரெயில் இணைப்புகளை மேம்படுத்தவும் தாங்கள் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். இந்த ஆய்வின் போது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.