மே 2 முதல் 4 ஆம் தேதி வரை பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம்.. எங்கெல்லாம் போகிறார் தெரியுமா?

ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 முதல் 4 ஆம் தேதி வரை பிரதமர் மோடி சுற்று பயணம் மேற்கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 2 முதல் 4 ஆம் தேதி வரை பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம்.. எங்கெல்லாம் போகிறார் தெரியுமா?

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2022 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும் என கூறப்பட்டுள்ளது.

அவரது பயணத்தின் போது, பெர்லினில் பிரதமர் மோடி ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்த 2 தலைவர்களும் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் 6வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.

அதன்பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்குச் செல்கிறார். அப்போது டென்மார்க் அரசு நடத்தும் 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இறுதியாக மே 4 ஆம் தேதி பிற்பகலில் இந்தியா திரும்பும் பயணத்தின் போது பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்திப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.