பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் பயணம்... மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார்...

உத்தரப்பிரதேசத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் பயணம்... மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார்...

காலை 10.30 மணியளவில் சித்தார்த் நகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தின் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் வாரணாசியில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக. பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இது நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார உள்கட்டமைப்பில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில்  தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகள் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதே இந்த திட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் கூடுதல் கவனம் செலுத்தப்படும் 10 மாநிலங்களில் உள்ள 17 ஆயிரத்து 788 கிராமப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவை வழங்கும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் 11 ஆயிரத்து 24 நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்படும் எனவும், பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வாரணாசியில் 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.