புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் கொண்டாட்டம்!

புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை பெற்றது. இதனை ஆண்டுதோறும் புதுச்சேரி மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு விடுதலை நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கடற்கரை சாலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

அதன் பின்னர் காவல்துறை உட்பட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். 

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். விடுதலை திருநாள் விழாவை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.