ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

வேகமாக பரவும் ஒமிக்ரானால் பொதுமக்கள் பீதி..!

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று முதல் பலி ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக அலை அலையாக வந்த கொரோனா பெருந்தொற்று மக்களை வீடுகளுக்குள் முடக்கிய நிலையில், கடந்த சில தினங்களாக அதன் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கொரோனா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்றானது கொரோனாவை விட வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் ஒமிக்ரான் வைரஸ் அவ்வளவு வீரியமானது அல்ல, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறி வந்த நிலையில், தற்போது அதன் பரவும் வேகமும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் இறப்பதும் ஆரம்பித்துள்ளது. 

இந்தியாவை பொருத்தவரை இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி 
செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 24 மாநிலங்களில் அதன் பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பிம்ப்ரி சின்ச்வாட் நகரை சேர்ந்த 52 வயது நபருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் நைஜீரியாவில் இருந்து திரும்பியவர் என்பதால், அவரது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தியாவில் ஒமிக்ரானால் ஏற்படும் முதல் உயிரிழப்பு என்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அவசியம் பின்பற்ற 
வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். என்னதான் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பதால், ஒமிக்ரானால் தான் அவர் உயிரிழந்தார் என எடுத்துக் கொள்ள முடியாது எனவும், ஆனால் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்ததால், அதனை கொரோனா உயிரிழப்பாக கருதலாம் என மும்பை சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.