இதுவரை இல்லாத அளவு இந்தாண்டு வழக்குகள் பதிவு - என்ஐஏ

இதுவரை இல்லாத அளவு இந்தாண்டு வழக்குகள் பதிவு - என்ஐஏ

இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு அதிக வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை பிரத்யேகமாக விசாரித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 19 புள்ளி 67 சதவீதம் அதிகரிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீர், டெல்லி, கர்நாடகா, கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 35 பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, இந்த ஆண்டு பயங்கரவாத தடுப்பு அமைப்பு 368 பேருக்கு எதிராக 59 குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ததுடன், தப்பியோடிய 19 கைதிகள் உட்பட 456 பேரை கைது செய்தது. என்ஐஏவின் கூற்றுப்படி, சந்தேக நபர்களில் இருவர் நாடு கடத்தப்பட்டதாகவும், ஒருவர் வேறு நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 38 என்ஐஏ வழக்குகளில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அவை அனைத்தும் தண்டனையில் முடிந்துள்ளன. 109 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2022 இல் ஆறு ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தண்டனை விகிதம் 94.39 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி...! நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி..!