கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்திய பாலிவுட் பிரபலங்கள் 10 பேர் கைது...

மும்பையில், சொகுசு கப்பலில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் பிரபலங்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்திய பாலிவுட் பிரபலங்கள்  10 பேர் கைது...

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகரின் பெண் தோழியின் சகோதரரான அஜிசிலாஸ் டெமெட்ரியேட்ஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு மும்பையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நபர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி சக பயணிகள் போல் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரபல பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அதிரடி சோதனையை தொடங்கிய அதிகாரிகள் சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பின், டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த இரு போதைப்பொருள் கடத்தல் காரர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானின் மகனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைதானவர்கள் மும்பையில் வைத்து விசாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின்,  சக இந்தி நடிகர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பிரபல நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கப்பூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.