தவறுதலாக எல்லையில் விழுந்த ஏவுகணை.. இந்தியா அளித்த விளக்கம் திருப்திப்படுத்தவில்லை - பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தவறாக ஏவப்பட்ட ஏவுகணை குறித்து இந்தியா அளித்த விளக்கத்தை அந்நாடு நிராகரித்துள்ளது.

தவறுதலாக எல்லையில் விழுந்த ஏவுகணை.. இந்தியா அளித்த விளக்கம் திருப்திப்படுத்தவில்லை - பாகிஸ்தான்

ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் கடந்த 9-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஏவுகணை ஒன்று எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து நேற்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விளக்கத்தை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இந்தியாவுடன் இணைந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டுமெனவும் ஐநாவிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் குரேஷி கூறுகையில், “இந்திய ராணுவ அமைச்சரின் விளக்கம் முழுமையற்றது மற்றும் போதுமானதாக இல்லை எனவும் பாகிஸ்தானை திருப்திப்படுத்த இது போதாது எனவும் தெரிவித்துள்ளார். ஏவுகணையை வீசி விட்டு இந்திய அதிகாரிகள் அளிக்கும் எளிய விளக்கத்தை பாகிஸ்தானால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறினார்.