பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி...

மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி...

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும்,  மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் முதல்வராக நீடிக்க அவர் 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பபானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிப்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.  

இந்நிலையில், பவானிப்பூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள்  பல்வேறு சுற்றுகளாக காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பபானிப்பூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடந்து முடிந்துள்ள 11 சுற்று வாக்கு  எண்ணிக்கையில் 34 ஆயிரத்து 721 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரோலை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா வீடு முன்  கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில், வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு அம்மாநில தலைமை செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவும் எச்சரித்துள்ளது.