அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம்!!

கடும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம்!!

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில், 152 உறுப்பினர்களுடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40க்கும் மேற்பட்டோருடன் சூரத் சென்றார். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவானது.

இந்த நிலையில் சூரத்திலிருந்து பாஜக ஆளும் அசாம் விரைந்த ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்களுடன், பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியால், மகாராஷ்டிரா சட்டப்பேரவையை கலைக்கும் நிலைக்கு செல்வதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ட்வீட் செய்தது, உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மும்பை விரைந்த நிலையில், நிர்வாகிகளுடன், பாலசாகேப் தோரட் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், சட்டப்பேரவையை கலைக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார். இப்படியான சூழலில், மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே, காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்றார்.