நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாள்...பிரதமர் மோடி பங்கேற்பு...!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாள்...பிரதமர் மோடி பங்கேற்பு...!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், எதிர்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது என லண்டனில் ராகுல்காந்தி பேசியதை எதிர்த்து, முதல் நாளில் இருந்தே பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என பேசிய ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், எம்பி பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாகவும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இதையும் படிக்க : அகரம், கீழ்நமண்டி அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்... !

இதனால் கூட்டத்தின் 15 நாட்களிலும் மக்களவை அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரையும், மாநிலங்களவை அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரையும் மட்டுமே செயல்பட முடிந்தது. தொடர்ந்து நான்காம் நாளாக கருப்பு உடையணிந்து எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் சென்றனர். மக்களவையில் பிரதமர் இன்று பங்கேற்ற நிலையில், பதாகைகளுடன் சபாநாயகர் ஓம்பிர்லாவை பேச விடாமல் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில நிமிடங்களிலேயே, அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவையிலும் ராகுல்காந்தி பதவி நீக்கம், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினர் கோஷங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

இரு அவைகளிலும் மொத்தம் 35 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், 10 மசோதாக்கள் கூட நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.