ஹரியானாவில் வலுக்கும் விவசாயிகள் போராட்டம்!

ஹரியானாவில் வலுக்கும் விவசாயிகள் போராட்டம்!

சூரியகாந்தி வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தி ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஹரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ஆம் தேதி ஹரியானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இதனை கண்டித்தும் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கக் கோரியும் ஹரியானாவில் விவசாயிகள்  தொடர்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். After the mahapanchayat the farmers started marching towards the highway. (Twitter/ANI)

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் நடந்து வரும் இப்போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெல்லி – அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் ஒன்று கூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் குறைந்த பட்ச ஆதார விலைக்காக மீண்டும் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். மேலும் விவசாய பின்புலம் கொண்ட தனக்கு அவர்களின் வலி தெரியும் என்றும் பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2020 ஆண்டு மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. அப்போது அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிறைவேற்றி தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை திரும்பப்பெற்றது குறிப்பிடத் தக்கது. 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!