காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன...?

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன...?

பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மக்களை ஈர்க்கும் படியான பல்வேறு  தேர்தல் அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, ”அனைத்து சமூகத்தினரின் சுமூகமான தோட்டம்” என்ற பிரிவில் 5 வகைகளாக வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.

1. கிரகஜோதி என்ற திட்டத்தின்கீழ், மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

2. கிரக லக்ஷமி என்ற திட்டத்தின்கீழ், மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

3. அன்ன பாக்யா என்ற திட்டத்தின் அடிப்படையில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

இதையும் படிக்க : மழை வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்...அவதியில் பொதுமக்கள்!

4. யுவநிதி என்ற அறிவிப்பின் கீழ் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.

5. சக்தி திட்டத்தின் கீழ், அனைத்து பெண்களும் மாநிலத்தின் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறாக 5 வாக்குறுதிகளை அளித்த மல்லிகார்ஜூன கார்கே, தனது 6வது வாக்குறுதியின்படி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முதல்நாளில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்படும் என தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே, பாஜக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் ஆட்சிக்கு வந்த 1 ஆண்டுக்குள் திரும்பப் பெறப்படும் எனவும் கூறினார். அதேபோல், 4 சதவீத சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் மீட்கப்படும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.